முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் ஒருவரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் மனைவி கொடுத்த புகாருக்குப் பின்னர் இந்தசம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. சம்பவ தினத்தன்று ஒரு கும்பல் வீட்டுக்குள் நுழைந்து, அவரது கணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த காரைச் சேதப்படுத்திய அந்தகும்பல், தட்டிக்கேட்ட அவரது கணவரை அடித்து துன்புறுத்தி தலையில் மொட்டையடித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அந்த நபரின் தோளில் செருப்பைக் கட்டிவைத்து தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது.. கூடவே அந்த பெண்ணையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.. ஒரு கட்டத்திற்கு மேல் நிர்கதியாய் நின்ற பாதிக்கப்பட்ட நபர் அந்தகும்பலிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டிருக்கிறார்.. ஆனால், அந்தகும்பலைச் சேர்ந்த ஒருவர், அந்த நபரின் மீது சிறுநீர் கழித்து அதனைக் குடிக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார்.. இந்த கொடூரச் சம்பவத்தை பார்த்தும் ஊர் மக்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடந்தவை அனைத்தையும் பாதிக்கப்பட்ட நபரின் மனைவி திகிதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இந்தசம்பவம் தொடர்பாக 17 பேர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் ஆய்வாளர் ரமேஷ் சந்திரா சிங் தெரிவித்துள்ளார். மேலும், நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தகொடூரச் செயலை அந்தகும்பல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாகப் பேசிய பத்ராக் மாவட்ட ஆட்சியர் கியான்ரஞ்சன் தாஸ், “இந்தசம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.. நாகரிகமான சமூகத்தில் இதுபோன்ற செயல்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.