தொழில்நுட்ப காலத்திலும் கூட இந்தியாவில் காதலிப்பதற்கு சாதி என்ற வெற்று பிம்பம் பெரும் தடையாகத்தான் இருக்கிறது. சாதி கடந்து காதலர்கள் காதல் செய்தாலும், அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த சமூகம் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது.
பல போராட்டங்களைச் சந்தித்து காதலர்கள் ஓன்று சேர்ந்தாலும், அவர்களின் பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் அவர்களைக் கொல்லக்கூட தயங்குவது கிடையாது. என்ன நடந்தாலும் பரவாயில்லை.. இதனால் தூக்கு தண்டனை கிடைத்தாலும் தயார் என்கின்றனர். அந்த அளவிற்கு சாதி வெறி நிறைந்திருக்கிறது.. 2018ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகள், ஒரு நாளில் காதல் செய்ததற்காக 4 பேர் ஆணவக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகின்றது.
அந்த 4 பேரில் ஒருவர் தான் இன்று உத்தரப் பிரதேசத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ஆம், உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா என்ற மாவட்டத்தில் கர்ச்சா கிராமத்தைச் சேர்ந்த போலா (23) என்ற இளைஞரும், இதே பகுதியைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த பிரியங்கா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதலித்து வந்த விவகாரம் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிந்து விட, போலாவையும், பிரியங்காவையும் கடுமையாக கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.. இதனால் கடும் கோபமடைந்த பிரியங்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரியங்காவையும், போலாவையும் அடித்து ஒரு குடிசைக்குள் பூட்டி, தீ வைத்துள்ளனர். குடிசை நன்றாக பற்றி எரிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது..
பின்னர் அக்கம், பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் போலா பாதி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.. பிரியங்கா 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்த சம்பவத்தை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உறுதிசெய்து, இந்தசம்பவம் தொடர்பாக 9 பேர் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்து 3 பேரை கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.