தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டத்தில் ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் கடந்த மாதம் திருப்பதிக்கு சென்று வந்தார்.. கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், பரிசோதனை செய்யாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் அந்த இளைஞருக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, இளைஞரின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உறவினர்கள் உதவி கேட்டனர்.. ஆனால், அவர்கள் கொரோனாவால் இளைஞர் திடீரென்று இறந்ததால் பயந்துபோய் உதவ முன்வரவில்லை.. பின்னர், வேறுவழியில்லாமல் குடும்பத்தினர் ஜேசிபி வாகனத்தை வரவழைத்து, பின் சடலத்தை அதில் வைத்து மயானத்திற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.