திருச்சி மாவட்டம் தொட்டியம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு விஷ்ணு தேவ் (6) என்ற மகன் உள்ளார்.பூபதியின் அண்ணன் கங்காதரன் ஆற்றில் மீன் பிடிக்க பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து 3 ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளாா்.
அதன்பின் இவர்களின் உறவினர்களான தமிழரசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து 2 ஜெலட்டின் குச்சிகளை காவிரி ஆற்றில் வெடிக்கச் செய்து மீன்களை பிடித்துள்ளார். மீதமுள்ள ஒரு ஜெலட்டின் குச்சியை மட்டும் கங்காதரன் வீட்டில் வைத்திருந்துள்ளார்.
அப்போது கங்காதரன் வீட்டுக்கு வந்த பூபதியின் மகன் விஷ்ணு, ஜெலட்டின் குச்சியை விளையாட்டாக எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளான். அப்போது ஜெலட்டின் குச்சி திடீரென பயங்கரமாக வெடித்தது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக தொட்டியம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக பலியானான்.
இந்தசம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் சிறுவனின் உடலை மணமேடு காவிாி ஆற்றங்கரையில் வைத்து எரித்துவிட்டனர். பின்னர் தகவலறிந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமாா் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கங்காதரன், மோகன்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய தமிழரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.