ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் 42 வயதான காளிதாஸ். இவர் திருவள்ளூரில் உள்ள டி.வி., பிரிட்ஜ் விற்பனை செய்யும் வீட்டு உபயோகப்பொருள் கடையில் வேலைப்பர்த்து வருகிறார். இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு போக இருந்தார். நேற்று மாலை இமானும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த தனது உறவினர் மகனான சஞ்சய் குமார் (19) என்பவரும் பூண்டியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைத்தடுமாறிய இமான் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி விட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சய்குமார், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இமானை காப்பாற்ற நீரில் குதித்துள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்த சஞ்சய்குமார், இமான் இருவரின் உடல்களை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.