தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர் முத்தரசு.. இவரது மனைவி மகேஸ்வரி.. கூலி வேலை செய்து வரும் மகேஸ்வரி, அந்தபகுதியில் வசிக்கும் வைகுண்டமணி என்பவரிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையால் வருமானம் ஏதும் இல்லாமல் தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த 3 மாதங்களாகச் சீட்டுப் பணம் செலுத்தவில்லை. இதனால் அவரது வீட்டுக்கு வைகுண்டமணி அடிக்கடி சென்று பணம் செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் மகேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று பணம் கேட்க, இல்லை என்று கூறியதால் வைகுண்டமணி ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடி விட்டார்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் போலீசார் படுகாயமடைந்த மகேஸ்வரியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய வைகுண்டமணியைத் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஊரடங்கால் வாழ்வாதரத்தையே இழந்துதவித்து வரும் பலர் தனியார் நிதி நிறுவனங்கள் தரும் நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்து வரும் நிலையில், தனியார் நிதி நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒருவர் சீட்டுப் பணம் செலுத்தாத ஒரே காரணத்திற்காக கொலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.