தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன்.. 35 வயதான இவர் தனியார் பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பணியினை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் நண்பர் போடி பாரதி நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் என்பவருடன் சேர்ந்து பைக்கில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் கோடங்கிபட்டி அருகில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் பைக்கின் மீது எதிர்பாரத விதமாக தாமோதரன் மோதியுள்ளார்.. இதில் வாகனத்தை ஓட்டி வந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.. அவருடன் வந்த நண்பன் சரவணனுக்கு கால் மற்றும் உடலின் மீது பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் எதிர் திசையில் வந்த ராஜேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் தாமோதரனின் நண்பர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ராஜேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்..
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த தாமோதரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.