சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தை அடுத்த கட்டக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் விவசாயி அமலூராம்.. இவர் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சமயம் எதிர்ப்பாராத விதமாக மாடு ஒன்று அவர் மீது மோதியுள்ளது..
இதனால் தலை மற்றும் கண்ணில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைப் பெறுவதற்கு கான்கர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் , அவரை உடனே ராய்ப்பூர் அரசு பொது மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.. விவசாயி அமலூராமிடம் ராய்ப்பூருக்குச் செல்வதற்கு பணம் இல்லாத காரணத்தால், அவர் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு திரும்பும் எண்ணத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார்..
இதையடுத்து, அந்த விவசாயியை கட்டக்கல் கிராமத்துக்கு அழைத்துச் செல்வதற்கு சஞ்சீவனி 108 ஆம்புலன்ஸ் ஒன்றை நிர்வாகமே ஏற்பாடு செய்தது.. முதலில் ஒப்புக் கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர், பின் செவ்வாய்க் கிழமை என்பதால் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை இயங்காது என்றும், செல்ல வேண்டுமென்றால் 4,000 ரூபாய் பணத்தை செலுத்துங்கள்.. அப்போது தான் ஆம்புலன்ஸ் இயங்கும் என்று கூறியுள்ளார்.
ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட தொகையைக் கொடுக்கும் அளவுக்கு விவசாயியிடம் வசதியில்லை. ஆகவே விவசாயி அமலூராம் தன்னுடைய குடும்பத்தினர் மூவருடன் வேறு வழியில்லாமல், தனது கிராமத்துக்கு நடந்துச் செல்ல முடிவெடுத்துள்ளார். 2 நாட்களாக சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார். இது பற்றி தகவலறிந்த சில நல்ல உள்ளங்கள் அவர்கள் நால்வரும் ஊருக்கு செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனர்..
இச்சம்பவம் சமூகவலைதளங்கள் மூலம் வெளிச்சத்துக்குவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சீவனி நிர்வாக பொறுப்பாளரான அசிம் கான், “விவசாயி அமலூராமை தொலைபேசியில் அழைத்து பேசினேன்.. அவர்களிடமிருந்து புகார் ஒன்றை பெற்றுள்ளேன். இத்தகைய மனிதாபிமானம் அற்ற செயலை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்..