தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் என்பவருடைய மகன் பிரபாகரன்..18 வயதுடைய பிரபாகரன் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், அவரது தந்தை ‘எப்ப பார்த்தாலும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன பிரபாகரன் நேற்று இலையூர் பேங்க் தெருவிலுள்ள ஒரு மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட எலி மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அரியலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அரசால் தடை செய்யப்பட்ட எலி மருந்தை சட்ட விரோதமாக விற்ற மளிகை கடைக்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜா சீல் வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.