உ.பியில் ஓடும் பஸ்ஸில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவிலிருந்து மதுராவிற்கு செல்வதற்கு தனது குழந்தையுடன் பெண் ஒருவர் படுக்கை வசதியுடன் இருக்கும் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.. அப்போது அந்த பெண்ணை பஸ்ஸில் இருந்த 2 டிரைவர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 12 பயணிகள் இருந்தும், அப்பெண்ணுக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
2 டிரைவர்களில் ஒருவர் இரவு நேரத்தில் பஸ் லக்னோ, மதுரா சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்தபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதனால் பாதிக்கப்பட்ட அந்தபெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் குறித்து கவுத்தம புத்தா நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பெண் போலீஸ் அதிகாரி கூறுகையில்,பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.. மேலும் பஸ்ஸை பறிமுதல் செய்து, மற்றொரு டிரைவரை நடந்த சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளோம்.
ஆனால் குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் தப்பியோடிவிட்டார். தற்போது பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரையும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.. பொதுமக்கள் பயணிக்கும் பஸ்ஸில், சக பயணிகள் மத்தியில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.