காஞ்சிபுரம் அருகே மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட் பிள்ளை. இவரது மகள் செந்தாரகை கடந்த எட்டாம் தேதியன்று கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்க, அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவர, அவரது தந்தை மீது சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார், தனது மகள் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தாள்,
அவளது காதல் பெற்றோர்களாகிய எங்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தனது உறவினர் பையன் ஒருவனுக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்தோம். கட்டாயம் திருமணம் என்பதால் 2 வாரம் கூட கணவருடன் இருக்க பிடிக்காமல் வாழ மறுத்து வீட்டிற்கு வந்து எங்களுடனேயே வசிக்கத் தொடங்கினாள். இது எனக்கு அவமானமாக தெரிந்தது. எனவே தனது மகளை கொலை செய்யத் திட்டமிட்டு, இறுதியாக எட்டாம் தேதி அன்று கணவருடன் சேர்ந்து வாழ எச்சரித்தேன் மீண்டும் மறுக்கவே, கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.