கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை ( VAO) தேங்காய் திருடர்கள் தாக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளமடம் அருகே உள்ள குருக்கள் மடத்தில் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார்.. அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று இரவு அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரில் இருக்கின்ற அவரின் சொந்த தோப்பில் மர்மநபர்கள் அத்துமீறி திருட்டுத்தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதன் பின்னர் அந்த திருட்டு கும்பலை பிடிப்பதற்கு தோப்பிற்குள் சென்றபோது, தேங்காய் திருடர்கள் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை ஊர் மக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோயிலில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்திருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி சுசீந்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலரை தாக்கிவிட்டு தேங்காய் திருடர்கள் தப்பிச் சென்ற சம்பவமானது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.