உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தீவிரபடுத்தி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த தன்னுடைய தந்தையின் உடலை, மகன் ரூ 2,500 பணம் கொடுத்து பார்த்த வேதனையான சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், ஹவுராவைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார்.. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்தநபர் உயிரிழந்த நிலையில், இறந்து பல மணிநேரம் கடந்தும் அந்த நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து, 12 மணி நேரத்திற்குப் பின்னரே அவரின் இறப்புச் செய்தியை அவருடைய மகன் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து போன குடும்பத்தினர் அவரை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து அவரது உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சென்று அவரது உடலைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
ஆனால், இறந்த தந்தையின் முகத்தைப் பார்க்க மற்றும் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்ய ரூ 51,000 வழங்க வேண்டும் எனக் கூறி அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், ரூ 2,500 பணத்தைக் கொடுத்து தனது இறந்த தந்தையின் முகத்தை அவரின் மகன் மற்றும் குடும்பத்தார் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் வேதனையையும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.