திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூரில் சண்முகம் என்பவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. சண்முகம் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்துள்ளார்.. இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், பட்டப்பகலில் கோவிலூர் அருகே ரோஜா நகரிலுள்ள எழிலரசி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
இதனைக் கண்ட பக்கத்து வீட்டுக்கார பெண் மகாலட்சுமி, உடனே எழிலரசிக்கு தகவல் தெரித்துள்ளார். இதையடுத்து பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த எழிலரசி கொள்ளையர்கள் இருவரையும் பார்த்து யார் நீங்கள்? என்று கேட்டுள்ளார்.. முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி, சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக எழிலரசியை மிரட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த பொருள்களை எடுத்துச் செல்ல முயன்றபோது, பக்கத்து வீட்டு பெண் மகாலட்சுமி அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அவரிடமும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு போலீசார் இந்தசம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் சிசிடிவி கேமரா ஏதும் உள்ளதா என போலீசார் ஆய்வு செய்தனர்.