இந்திய அணி தற்போது 40 ஓவர் முடிவில் 267/3 ரன்களில் விளையாடி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய அணியினால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் கடந்தனர்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 31வது ஓவரில் ரோஹித் சர்மா 95 ரன்கள் இருந்த போது ரிச்சர்ட்சன் பந்து வீச்சில் எல்லைக்கோடு அருகே ஹெண்ட்ஸ்கோம்ப் வசம் பிடிபட்டார். இதையடுத்து கே.எல் ராகுல் களம் இறங்கி தவானுடன் ஜோடி சேர, ஷிகர் தவான் ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். தவான் 150 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்143 ரன்கள் எடுத்திருந்தபோது 38வது ஓவரில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலியும் ஆட்டமிழந்தார்.தற்போது இந்திய அணி 40 ஓவர் முடிவில் 267 ரன்களில் உள்ளது. தற்போது கே.எல் ராகுல்,ரிசப் பண்ட் விளையாடி வருகின்றனர்.