ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 23 (10) ரன்கள் குவித்தார்.
பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களும், இறுதியில் ஷ்ரேயஸ் கோபால் அதிரடியாக விளையாடி 19* (7) ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சேன் வாட்சனும், பாப் டுப்லெஸியும் களமிறங்கினர். முதல் ஓவரில் வாட்சன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ரெய்னா 4, பாப் டுப்லெஸி 7, கேதார் ஜாதவ் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் சென்னை அணி 6 ஓவரில் 24/4 விக்கெட் இழந்து தடுமாறியது.
அதன் பின் கேப்டன் தோனியும், அம்பத்தி ராயுடுவும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். இறுதியில் அம்பத்தி ராயுடு 57 (47) ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை ஜடேஜா சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் தோனி 58 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் ஒரு பந்தை மிச்சேல் சான்ட்னர் எதிர்கொண்ட போது இடுப்புக்கு மேல் வந்ததால் நடுவர் “நோ பால்” அறிவித்தார்.
மற்றொரு நடுவர் நோபால் கிடையாது என்று அறிவித்தார். இது பற்றி ஜடேஜா நடுவரிடம் கேட்டுக் கொண்டிருக்க இதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த கேப்டன் தோனி கோபத்துடன் மைதானத்துக்குள் வந்து நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தோனியின் இந்த செயலால் ஐபிஎல் நிர்வாகம் ஒரு போட்டியில் உள்ள சம்பளத்தில் 50% அபராதம் விதித்தது. இறுதியில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட மிச்சேல் சான்ட்னர் அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.