கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈராக் அரசாங்கம் ஈரானுடனான தனது எல்லையை மூடியுள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள சுகாதார ஊழியர்கள் நோய்த்தடுப்பு மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, எல்லையோர பகுதியில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.