தூத்துக்குடி மட்டக்கடை தெற்கு நாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி குளோரியம்மாள் (75). நேற்று அப்பகுதியிலுள்ள கடைக்கு குளோரியம்மாள் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குளோரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். அதிர்ச்சியில் குளோரியம்மாள் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் நகையைப் பறித்த நபரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
பின்னர், அந்தக் கொள்ளையனை வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் அருள் விசாரணை நடத்தியதில், திருடன் காமநாயக்கன்பட்டி அருகேயுள்ள குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் (38), என்பது தெரியவந்தது.
மேலும், இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகை பறிப்புச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.