நில விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில வட்டாட்சியர் விஜயா ரெட்டி, அலுவலகத்தில் தீயிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், தற்போது ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுர்மெட் பகுதியில் வட்டாட்சியராகப் பணி புரிந்து வந்த விஜயா ரெட்டி கடந்த நான்காம் தேதி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அப்பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்பவரின் நிலம் தொடர்பாக விஜயா ரெட்டி எடுத்த நடவடிக்கையால் கோபமடைந்த சுரேஷ், விஜயா ரெட்டியைப் பழிவாங்க அவரின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.அங்கு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை விஜயா ரெட்டி மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். எதிர்பாராத இந்த அசம்பாவிதத்தால் பதறிப்போன அலுவலக ஊழியர்கள் விஜயா ரெட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட விஜயா ரெட்டியின் ஓட்டுநர் பலத்த தீக்காயத்துக்குள்ளானார்.
கொலைச் செயலில் ஈடுபட்ட சுரேஷுக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. வட்டாட்சியர் விஜயா ரெட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓட்டுநர் குருநாத் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.குற்றவாளியான சுரேஷ் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடுமையானதீக்காயத்துக்கு இரையான சுரேஷ் இன்று மாலை 3.30 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். பட்டப்பகலில் வட்டாட்சியருக்கு அலுவலகத்தில் நடைபெற்ற, இந்த கொலைத் தாக்குதல் சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் மட்டுமல்லாது நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.