கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது
ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
வருண் ஆரோன் வீசிய முதல் ஓவரில் கிறிஸ் லின் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து கில்லும் வருண் வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து நித்திஷ் ராணாவும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்தனர். அதன் பின் ராணா 21, சுனில் நரேன் 11 ரன்னிலும் நடையை கட்டினர். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். அதன்பிறகு எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸெல் 14, பிராத்வேய்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருந்தாலும் தினேஷ் கார்த்திக் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 50 பந்துகள் 97* ரன்கள் (9 சிக்ஸர், 7 பவுண்டரி) ரன்களிலும்,ரிங்கு சிங் 3* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளும் தாமஸ், ஷ்ரேயஸ் கோபால், உனத்கட் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.