Categories
அரசியல் மாநில செய்திகள்

பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல…!!

இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை. லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன் என்று பதிவிட்டார்.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸோ அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என பதிவிட அதற்கு முரசொலி அலுவலகத்தின் பட்டாவை ஸ்டாலின் ட்விட்டரில் போட, பட்டா வேண்டாம் மூலப் பத்திரம் எங்கே என ராமதாஸ் பதில் கேள்வி கேட்டார்.

ராமதாஸ், ஸ்டாலின்

அதுமட்டுமின்றி பாஜக மாநில செயலர் சீனிவாசன் இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்ததை அடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திமுகவுக்கும், தமிழ்நாடு தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துவிட்டுவந்தார்.

முரசொலி பட்டா

இத்தனை ஆண்டுகாலமாக பஞ்சமி நிலம் தொடர்பான விவாதங்கள் பெரிய அளவில் எழாமல் இருந்த சூழலில் அசுரன் திரைப்படம் பற்றவைத்த பொறி திமுக – பாமக இடையேயான மோதலாக மாற தற்போது பஞ்சமி நிலம் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

பஞ்சமி நிலம் என்றால் என்ன?

ஒரு மனிதனுக்கு நிலம்தான் முதல் உரிமை. அந்த நிலத்தை அடைந்துவிட்டால் அந்த மனிதனை எளிதாக அடிமையாக்கிவிடலாம். இதுவரை உலக வரலாறு சொல்லிக்கொண்டிருப்பது அதைத்தான்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது நிலப்பரப்பு அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. வளமான நிலப்பகுதிகள் குறிப்பிட்ட மிராசுதாரர்களிடம் இருந்தது. அங்கு கொத்தடிமைகளாக பலர் பணிபுரிந்தனர். அவர்களை மிராசுதாரர்கள் விலங்குகளை நடத்துவது போல் நடத்தினர்.

இதனையடுத்து, அடிமை முறை, தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு நிலத்தினை வழங்க வேண்டும் என்று புரிந்துகொண்ட ஜேம்ஸ் திரமென்ஹீர் ஹெரே (ஆங்கிலேயர்கள் காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தவர்) பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு 17 பகுதிகள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஜேம்ஸ் திரமென்ஹீர் ஹெரே

இந்த அறிக்கை தொடர்பான விவாதம் 1892ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதே ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பிரிட்டிஷ் அரசாங்கம் நிலம் வழங்கியது. சென்னை மாகாணத்தில் மட்டும் 12 லட்சம் ஏக்கர் நிலம் பஞ்சமி நிலமாக அறிவிக்கப்பட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

அந்த நிலத்தில் பட்டியலின மக்கள் பயிர் செய்து வாழ்வாதாரம் பெருக்கியோ இல்லை வீடுகள் கட்டிக்கொண்டோ வாழலாம். முதல் பத்தாண்டுகளுக்கு அந்த நிலத்தை யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது.

அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தாலும் தங்கள் வகுப்பைச் சார்ந்தவர்களிடம் மட்டுமே விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கோ விடமுடியும். மற்ற வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது.

அந்த நிலத்தை பிற வகுப்பினர் மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலத்தை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது. இப்படிப்பட்ட சட்டத்திட்டங்களோடு வழங்கப்பட்ட நிலங்கள்தான் பஞ்சமி நிலங்கள்

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம்; ஆதிக்க சாதியினரிடம்?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது வாழ்வாதாரத்தைப் பெருக்கி அடிமைத் தனத்தை ஒழிக்கவும் இப்படிப்பட்ட சட்டத்திட்டங்களோடு நிலங்களை வழங்கிவிட்டு சென்றது பிரிட்டிஷ் அரசாங்கம்.

ஆனால், பட்டியலின மக்களிடமிருந்த பஞ்சமி நிலத்தை ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு ஆதிக்க சாதியினர் பறிக்கத் தொடங்கினர். நேரடியாக அவர்களின் பெயரில் நிலம் இருந்தால் செல்லாது என்று சட்டம் கூறுவதால் தங்களின் போக்குக்கு உடன்படக்கூடிய மற்றொரு பட்டியலின மக்களில் யாரின் பெயரிலாவது நிலத்தை பதிவு செய்யும் முறையைத் தொடங்கி, பஞ்சமி நிலத்தை கைப்பற்றத் தொடங்கினர். பெரும்பான்மையான பஞ்சமி நிலங்கள் இதுபோன்று ஆதிக்க சாதியினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

நிலம் என்பது உரிமை

ஆம், ஆங்கிலேயர்களிடமிருந்து ஒட்டுமொத்த இந்தியாவும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் பஞ்சமி நிலத்தை பறித்துக்கொண்டு பட்டியலின மக்களை மீண்டும் அடிமைப்படுத்தினார்கள் ஆதிக்க சாதியினர். சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த இந்திய அரசாங்கங்களும், அவர்களுக்கு இதுவரை ஆதிக்க சக்தியினரிடமிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுத் தர இயலவில்லை.

பஞ்சமி நிலத்திற்கான பலி

பஞ்சமி நிலத்தின் பொருட்டு, பட்டியலின மக்கள் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அந்தவகையில், 1994ஆம் ஆண்டு, அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் காரணையில் பஞ்சமி நிலம் தொடர்பாக போராட்டம் நடைபெற்றது.

காரணை கிராமத்தில் 633 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை மீட்கப் பட்டியலின மக்கள் அக்டோபர் 4ஆம் தேதி ஒன்றுகூடினார்கள். இதனை பொறுக்க முடியாதவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு போராட்டத்தை கலைத்து, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையையும் அகற்றினர். உரிமைக்காக நடந்த போராட்டத்திற்கு வேறு வண்ணம் பூசியதை அடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்தது.

ஜான் தாமஸ், ஏழுமலை

இதனையடுத்து, அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் செங்கல்பட்டு துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்டோபர் 10ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

ஆட்சிகள் மாறின; காட்சிகள்?

1996ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் தலைமையில், பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு வந்த ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் மறக்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, பஞ்சமி நிலம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தார். ஆனாலும், மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட அந்தக் கமிஷனும் செயல்படவில்லை. இங்கு ஆட்சிகள்தானே மாறிக்கொண்டிருக்கின்றனவே ஒழிய, காட்சிகள் என்று மாறியிருக்கின்றன?

இனி செய்ய வேண்டியது என்ன?

இதுவரை பஞ்சமி நிலம் தொடர்பான விவாதங்கள் பொதுத்தளத்தில் இவ்வளவு பெரிதாக எழுந்ததில்லை. இப்போது எழுந்திருக்கிறது. முரசொலி அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலமா இல்லையா என்பது இங்கு முக்கியமான கேள்விதான். அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் நிச்சயம் அந்த நிலம் மீட்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லைதான்.

ஆனால், தற்போது பொதுத்தளத்திற்கு வந்திருக்கும் இந்த விவகாரத்தை, விவாதத்தை திமுக – பாமக என்ற இரண்டு கட்சிகளுக்குள் முடக்கிவிடக்கூடாது. இன்றைய எதிர்க்கட்சி நாளைய ஆளுங்கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலினும், மாற்றம் முன்னேற்றம், தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று பேசும் பாமகவின் நிறுவனர் ராமதாசும் (அனைவரும்தான்) இந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்று பறிபோன பஞ்சமி நிலம் குறித்து தற்போதைய அரசிடம் கேள்விகளைக் கேட்க வேண்டும். ஏனெனில் இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை.

முதலமைச்சர் பழனிசாமி

லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கமிஷன் அமைத்தது போல் உடனடியாக ஒரு கமிஷனை தற்போதைய அரசு அமைத்து பஞ்சமி நிலங்களை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக, அமைக்கப்படும் கமிஷன் துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக நிலங்களை கண்டறிய வேண்டும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இதை பட்டியலின மக்களுக்கான உரிமைப் பிரச்னையாக அரசு பார்க்க வேண்டுமே ஒழிய, தன் கூட்டணி கட்சி மூலப்பத்திரத்தை கேட்டுவிட்டது, தன்னுடைய எதிர்க்கட்சி அதை இன்னும் காட்டவில்லை, அதனால் பொறுமை காப்போம் என்று இதில் குளிர் காயக்கூடாது. அப்படி இருத்தல் அரசுக்கு அழகல்ல… அப்படி இருந்தால் அது மக்களுக்கான அரசே அல்ல.

Categories

Tech |