கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார்.
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனவால் பாதித்த 69 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தமாக பாதிக்கப்பட்ட 70 பேரில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 1,210 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 94 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 210 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம் தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது.