பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானிசாகர் பகுதியை அடுத்த புதுக்கீனுர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி காணப்படும். இந்த கிராமத்திற்கு சென்ற மாதம் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கால்நடைகளை தாக்கி வேட்டையாடியும் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர்.
இந்நிலையில் மீண்டும் அதே சிறுத்தை வனப்பகுதிக்குள் இருந்து தப்பி கிராமத்திற்குள் மீண்டும் புகுந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தினர். இந்நிலையில் மூர்த்தி என்ற விவசாயி தனது ஆடுகளை பட்டியில் வைத்துப் பூட்டி விட்டு சென்றுள்ளார்.
காலை வந்து பார்க்கும் பொழுது ஒரு ஆட்டு குறைந்து இருந்தது. பின் பட்டி அருகே சிறுத்தை கால் தடம் இருந்ததால் சிறுத்தை கவ்வி கொண்டு சென்று இருக்கும் என்று நினைத்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பின் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பொழுது சிறுத்தை உடல் பதிவாகி இருந்தது. இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக ஒன்றினை அமைத்து சுற்றி பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.