உலக நாடுகளில் இராணுவ பலம் அதிகமுள்ள முதல் 5 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளுக்கிடையே போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகத்தில் இருக்கும் முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. அதில் இந்தியாவும் ஓன்று.
அதன்படி ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பலத்தை அதிகரிப்பதற்காக பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, இராணுவ வலிமையைக் கண்காணித்து வரும் வலைத்தளமான குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) பின்வரும் 5 நாடுகளின் படைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறுகின்றது.
அவை இராணுவ வலிமை, நிதி முதல், தளவாட திறன் என்பவற்றுடன் ஒப்பிடப்பட்டு அதனடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
5) ஜப்பான்
ஆசியாவில் வட கொரியாவின் கொந்தளிப்பான மண்டலத்துக்கு பக்கத்தில் இருக்கும் பகுதியாக ஜப்பான் உள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட அதிநவீன ஆயுத பலத்துடன் கூடிய படையை அந்நாடு வைத்துள்ளது. அந்நாட்டின் இராணுவ படையில் 2,47,160 பேர் இருக்கின்றனர்.
புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா தவிர வேறு எந்த நாட்டையும் விட ஜப்பானில் மட்டும் 152 சிறப்பு நடவடிக்கை விமானங்கள் இருக்கின்றன. மேலும் 40 Destroyers கொண்ட கடற்படை உள்ளது. அத்துடன், 3,130 கவச வாகனங்கள், 1,004 டாங்கிகள் மற்றும் 119 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஜப்பானிடம் இருக்கிறது.
2020-ஆம் ஆண்டில் ஜப்பான் தனது இராணுவத்திற்காக 49 பில்லியன் டாலரை செலவழிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4) இந்தியா
காஷ்மீர் பகுதிக்கு அருகிலுள்ள பாகிஸ்தானுடன் நீண்டகால எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள இந்தியா, 1,44,000 பேரை தனது ஆயுதப் படைகளில் இணைத்துள்ளது. இந்தியாவிடம் 4,292 டாங்கிகள், 4,060 பீரங்கிகள் மற்றும் 538 போர் விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் உலகில் வளர்ந்துவரும் நாடாகவும் உள்ளது.
இந்த ஆண்டு இந்தியா தனது இராணுவத்திற்காக 61 பில்லியன் டாலர் செலவழிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
3) சீனா
ஆசியாவின் மிக சக்தி வாய்ந்த நாடாகவும், வளர்ந்துவரும் நாடுகளில் அமெரிக்காவுக்கு கடும் போட்டியாக இருக்கும் சீனா இந்தப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது. சீனாவின் இராணுவப் படையில் 2,183,000 பேர் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் உலகில் அதிக வீரர்களைக் கொண்ட படையாக சீனா உள்ளது.
தென் சீனக் கடல் முழுவதும் பிராந்திய மோதல்கள் நடைபெற்றுவரும் நிலையில் சீனா சமீபத்திய ஆண்டுகளில் தனது கடற்படையை மேலும் தீவிரமாக வலுப்படுத்தி வருகின்றது. சீனாவிடம் 74 நீர்மூழ்கிக் கப்பல்கள், 52 போர் கப்பல்கள் மற்றும் 36 Destroyers உள்ளது.
தரைப்படையில், சீனாவில் 33,000 கவச வாகனங்கள் மற்றும் 3,500 டாங்கிகள் உள்ளன. அவர்களது விமானப்படை 1,232 போர் விமானங்களையும் 281 தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் கொண்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் சீனா தனது ஆயுதப்படைகளுக்காக 237 பில்லியன் டாலர் செலவழிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2) ரஷ்யா
சமீபத்திய ஆண்டுகளில் சிரியா மற்றும் உக்ரைன் போர்க் களத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, உலகின் பல்வேறு நாடுகளில் தனது டாங்கிகளை நிறுத்தியுள்ளது. இதன்படி பல்வேறு நாடுகளிலும் 12,950 டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது அமெரிக்க இராணுவம் வைத்திருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 27,038 கவச வாகனங்கள், 6,083 யுனிட் தானியங்கி பீரங்கிகள் மற்றும் 3,860 ராக்கெட் புரொஜெக்டர்கள் (rocket projectors) உள்ளதுடன் 1,013,628 பேர் இராணுவப் படையில் இருக்கின்றனர். ரஷ்யாவின் விமானப்படையில் 873 போர் விமானங்களும் 531 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் உள்ளன. கடற்படையில் 62 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 48 போர் கப்பல்கள் உள்ளன. இந்த ஆண்டு ரஷ்யா தனது இராணுவத்திற்காக 48 பில்லியன் டாலர் செலவழிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1) அமெரிக்கா
உலகில் மறுக்கமுடியாத இராணுவ சக்தியாக அமெரிக்கா தான் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2,085 Fighters, 967 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 945 போக்குவரத்து மற்றும் 742 சிறப்பு நடவடிக்கை விமானங்களைக் கொண்ட அமெரிக்காவில் பூமியின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான விமான அலகுகள் உள்ளன.
மேலும், 39,253 கவச வாகனங்கள், 91 கடற்படை Destroyers மற்றும் 20 விமானம் தாங்கிகள் ஆகியவற்றை அமெரிக்கா கொண்டுள்ளது. அமெரிக்கப் படையில் 1,40,000 வீரர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு வாஷிங்டன் 750 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.