திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காமராஜ் நகர் சேர்ந்தவர் செல்வகுமார் இவரது மகனான பிரபுக்கு (27) தாமினிஎன்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது, இந்த தம்பதியினருக்கு 7 மாதத்தில் கை குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரபுவின் மனைவி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தாமினி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி உறவினர்கள் முன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது பிரபுவின் தாயை தாமினியின் உறவினர்கள் தாக்கியதால் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் செய்தால் உங்கள் அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்து விடுவார்கள் என தாமினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிரட்டிஉள்ளனர்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த பிரபு கடந்த மே 21-ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரபு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபு எழுதிய கடிதம்:
இதற்கிடையில் பிரபு எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது, அதில்.. திருமணம் ஆனதில் இருந்தே பெண் வீட்டார் மூலம் பல பிரச்சனைகள் வந்தன, எனவும் என் மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். நான் பலமுறை அழைத்தும் என் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தையின் போது என் மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டினர் இந்த நிலையில் எனது குடும்பத்தினரைக் காப்பாற்ற வேறு வழியின்றி நான் தற்கொலை செய்கிறேன்.
நான் கோழையல்ல… அப்பாவி ஆண்களுக்கு எதிரான பெண் வன்கொடுமை சட்டத்திற்கு இது சமர்ப்பணம் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தை கொண்டு பிரபுவின் தாய் மல்லிகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பிரபுவின் மனைவி தாமினி அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.