இளைஞரை தாக்கிய சங்கரன் கோவில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில் மலை யான்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தங்கத்துரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பைக்கில் சென்ற என்னிடம் ஆவணங்களைக் கேட்டுத் தாக்கினர். மேலும் காவல்நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் சத்தியபிரபா மற்றும் உதவி ஆய்வாளர் அன்னலெட்சுமி ஆகியோர் தாக்கினர்.
இது தொடர்பாக காவல் ஆய்வாளர் சத்தியபிரபா உட்பட 6 காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் கடந்த ஜனவரி 24-ல் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆகவே காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யவும், அந்த வழக்கை டிஎஸ்பி விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட் டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன் மற்றும் பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதாடினர்.. அவர்கள் கூறும்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது அதே காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதால் புகாரைப் பதிவு செய்ய மறுக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுதாரரின் புகார் தொடர்பாக வேறொரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், டிஎஸ்பி விசாரிக்க தென்காசி எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.