அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மலேசிய மன்னர் மற்றும் இராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், பணக்கார நாடுகள் என்று வேறுபாடு எதையும் காட்டாமல் கொன்று குவித்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். அந்த வரிசையில் மலேசியாவும் இருக்கிறது. ஆம், அந்நாட்டில் 2,031 பேர் பாதிக்கப்பட்டதுடன், 23 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் அங்கிருக்கும் அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசியா அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்படி இந்த வைரஸ் ஏற்பட்டது என மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதையடுத்து மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா (sultan abdullah) மற்றும் மலேசிய ராணி துங்கு அஸிசா அமினா மைமுனாவுக்கு (Tunku Azizah Aminah Maimunah Iskandariah) மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்கள் இருவருக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.