கொரோனாவை மாட்டு கோமியம் போக்கும் என்று வழங்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 140 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வதந்திகளும் பல வகையில் பரவி வருகிறது. வதந்தியை பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.
அந்த வகையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகி நாராயண் சட்டர்ஜி கொரோனா வைரசை மாட்டு கோமியம் குணப்படுத்தும் என்று சொல்லி மாட்டு கோமியத்தை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்களுக்கு மாட்டு கோமியம் வழங்கப்பட்டது.
இதை வாங்கி குடித்த ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது பரபரப்பை உண்டாக்கிய நிலையில் மாட்டு கோமியம்கொடுத்த பாஜக நிர்வாகி நாராயண் சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகியின் கைது நடவடிக்கையை அம்மாநில பாஜக கண்டித்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா மாநில பாஜக பொதுச்செயலாளர் சாயன்டன் பாசு கூறுகையில் , நாராயண் சட்டர்ஜி இதனைப் பசு கோமியம் என்றுதான் அவர் மக்களுக்கு கொடுத்துள்ளார். வேறு பொய் சொல்லி இதை கொடுக்கவில்லை, கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கவில்லை. பசு கோமியம் குடித்தால் ஆபத்து ஏற்படும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.