கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் எத்தனை நாட்கள் வாழும் என்பது பற்றி மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன.
இந்த கொடிய கொரோனா எப்படி பரவுகிறது என்று பார்த்தால், பெரும்பாலும் காற்றில் பயணிக்கும் நீர்த்துளிகள் வாயிலாகவே பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பொருட்களின் மேற்பரப்பில் பரவி படிந்து விடுகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸின் வாழ்நாளானது, வெப்பநிலை, ஈரப்பதம், பொருளின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இருந்து வேறுபடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது, சராசரியாக 20டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொரோனா வைரஸ் எஃகு பொருட்களின் மேற்பரப்பில் 2 நாட்களும், மரம் மற்றும் கண்ணாடியின் மேற்பரப்பில் 4 நாட்களும், உலோகம், பிளாஸ்டிக், செராமிக் போன்ற பொருட்களின் மீது 5 நாட்கள் வரையிலும் வாழக்கூடியது என்று ரேச்சல் கிரகாம் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.