புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரியை மருத்துவ குழுவினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபங்கு சமத்துவபுரம் அருகாமையில் மருத்துவக் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவற்றின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் மீதியிருக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கட்டுமானப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதில் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் இம்மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கல்லூரியின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வின் போது நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு, படுக்கை வசதி, அலுவலகம், மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறை, உடற்கூறியல் அருங்காட்சியகம், ஆய்வுக்கூடம், உடற்கூறியல் ஆய்வுரை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா எனவும் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை பற்றியும் ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்லூரி செயல்படுவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் முன்பு மருத்துவ சார்ந்த குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.