ஆப்பிரிக்காவிருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சினகல், மாலி, சாட், கானா போன்ற பகுதிகளிலிருந்து வந்த அகதிகளின் படகு லிபியா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் காப்பாற்றப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.” என தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டின் கானா, மாலி போன்ற பகுதிகளில் நிலவும் வறுமை மற்றும் வேலையின்மையின் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்திற்காக உயிரை பணையம் வைத்து வேறு நாடுகளுக்கு கடலில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பயணிக்கும்போது இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ளவும், வறுமையில் இருந்து விடுபடவும் பலரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதேபோல ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஏராளமான அகதிகள் மத்திய தரைக் கடல் வழியாக படகுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் செல்லும் பொழுது நடுக்கடலில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.