தமிழகத்தில் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் ஆல் பாஸ் என்று மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கட்டணம் செலுத்திய பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்த அறிவிப்பு மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கட்டணம் செலுத்தாத மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள தேர்வை இந்த மாதம் 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், இது குறித்து தெரிவிக்கையில் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலமாகவும் தேர்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழகம் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.