கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கிறதா? என எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இது ஒருபுறமிருக்க, கொரோனாவால் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி நேர்மறையான விஷயங்களை அரசு வெளிப்படையாக காட்டும் பட்சத்தில், அதிகப்படியான மரணங்களை அரசு மறைக்கிறதா? என்ற கேள்வியைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கொரோனா மரணம் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கை தமிழக அரசு மறைக்கிறதா? இதுவரை மதுரையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மயானம் மற்றும் கல்லறைத் தோட்டத்தின் விவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலை எதுவென்பதை தமிழக அரசு மக்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.