கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் பணி முடிந்து வீடு செல்லும்போது மற்றும் வெளியே கடைக்கு செல்லும்போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். கொரோனா அச்சத்தால் தவறான புரிதலால் அவர்கள் தாக்கப்படுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஒரு மருத்துவர் குழு அல்லது ஒரு மருத்துவ பணியாளர் குழு ஒரு பகுதிகளுக்குள் கொரோனா ஆய்வு நடத்துகிறார்கள் அல்லது செவிலியர்கள் சோதனைக்கு செல்கிறார்கள் என்றால் அப்போது மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய (கொரோனா) போரில் முன்னணியாக இருக்கும் மருத்துவ பணியாளருக்கு மக்கள் உதவியாக இருக்கவேண்டும். ஆனால் நிறைய இடங்களில் இவர்கள் தவறாக புரிந்து கொண்டு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது வேதனையாக இருக்கிறது.