உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் கூகுளில் 2022-ல் அதிக அளவில் தேடப்பட்ட பல நிகழ்வுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், google நிறுவனமானது தற்போது 2022-ல் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் மற்றும் தலைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் What Is என்ற பிரிவில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் உள்ள பல பிரிவுகளில் குறுகிய காலத்திற்கு பணியாற்றலாம்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால்தான் ஜூன் 12-ஆம் தேதி முதல் 18-ம் தேதி வரை அக்னிபாத் என்றால் என்ன என்ற கேள்வி கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது. இந்த அதிக தேடலில் தெலுங்கானா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் சண்டிகர், சிக்கிம், நாகலாந்து மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இருக்கிறது. இதனையடுத்து டெல்லி 7-வது இடத்திலும், பீகார் 21-வது இடத்திலும், உத்திரபிரதேசம் 22-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் தமிழகம் 25-வது இடத்தில் இருக்கிறது.