ஆன், பெண் பாலின சமத்துவத்திற்கான பயணத்திற்கு முத்தலாக் தடை மசோதா மைல்கல்லாக அமையும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர் கட்சி சார்பில் இருந்து தீவிர எதிர்ப்பு எழுந்ததை அடுத்து முத்தலாக் தடை சட்டத்தில் சில திருத்தங்களை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்தன. பின் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் மீது சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். வாக்கெடுப்பின் இறுதியில் 77 வாக்குகள் ஆதரவாகவும் 100 வாக்குகள் எதிராகவும் அமைந்ததன் காரணமாக மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிறைவேற்றினார்.
மேலும் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் வாங்கிய பின் நாடு முழுவதும் முத்தலாக் தடை சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட இத்தருணம் நாடே திருப்தி அடைந்த தருணமாக கருதுகிறேன் என்றும், ஆண் பெண் பாலின சமத்துவத்திற்கான பயணத்தில் முத்தலாக் தடை மசோதா மைல்கல்லாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.