ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் தெருவில் அன்வர் அலி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கடையில் இருந்து 2,000 ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்கள் திருடுபோய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்வர் அலி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் அதிகாரிகள் திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.