ஆட்டோவில் மது பாட்டில்களை கடத்த முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகில் மாலையம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சில மர்ம நபர்கள் ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு இருப்பதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை மர்மநபர்கள் பார்த்ததும் ஆட்டோவில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்துவிட்டனர்.
இதனை அடுத்து அந்த நபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் சித்தலூர் கிராமத்தில் வசிக்கும் கணபதி, நாவலூர் கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் மற்றும் புதுகாலனியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் ஏழுமலை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் முழு ஊரடங்கு நாட்களில் கூடுதலான விலையில் விற்பனை செய்வதற்காக மாலையம்மன் கோவில் பகுதியில் அமைந்திருக்கும் மதுபான கடையிலிருந்து மது பாட்டில்களை கடத்தி செல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன் ஏழுமலை மற்றும் கணபதி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 1,38,960 ரூபாய் மதிப்பு மிக்க 1008 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.