சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் அவர், விஷம் அருந்தியோ அல்லது வேறு விதத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவியின் உடற்கூறாய்வு தொடர்பாக முழுமையான அறிக்கை வந்த பிறகே காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இங்கு இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த 16ம் தேதி முதல் வீட்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதோடு அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் மாணவியர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்று மாணவி விடுதி அறையின் உள்ளே மயங்கிய நிலையல் கிடந்துள்ளார். உடனே சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மற்றும் மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
அதில், நேற்று இரவு வரை பெற்றோரிடம் மாணவி பேசிக்கொண்டிருந்ததாகவும், திடீரென மாணவி உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மனைவி தற்கொலை செய்து கொண்டதாக எந்த அறிகுறியும் இல்லை என முதற்கட்ட உடற்கூராவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.