இடிந்து விழுந்த வீட்டை சரி செய்து தருமாறு நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகர் பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பில் 100-க்கும் அதிகமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக அரசால் கட்டி தரப்பட்டிருக்கும் இந்த குடியிருப்பில் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.
அதனால் இதை சீர் அமைத்து தருமாறும் இல்லையென்றால் குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய வீடு கட்டித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. பின்னர் திடீரென பெய்த மழையில் வீட்டின் மேற்கூரை, பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் நரிக்குறவர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேதமடைந்த வீடுகளை உடனடியாக இடித்து விட்டு புதிய வீடு கட்டித் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வீடுகளை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். மேலும் இதன் காரணத்தினால் நரிக்குறவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.