Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய கீதம் இசைப்பு…!!

பூந்தமல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் முகமது ஹனீப் கவுஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி, போரூர், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 17க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கொடியுடன் பங்கேற்றனர். அதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன், பூந்தமல்லி உதவி ஆணையர் செம்பேடு பாபு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இமாம்கள், ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இஸ்லாமியர்கள் அனைவரும் மரியாதை செலுத்தி கூட்டத்தை நிறைவு செய்தனர்.

Categories

Tech |