ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகு நம் நாட்டிற்கு கிடைத்த விடுதலையின் அடையாளமாக தேசியக்கொடி விளங்கி வருகிறது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியின் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர். அதே நேரம் மூவர்ண தேசிய கொடியை பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று. இந்திய தேசிய கொடி முதன் முறையாக சுதந்திர இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி 1947 ஆம் வருடம் அன்று ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய பல தியாகிகள் செய்த அர்ப்பணிப்பின் அடையாளச் சின்னமாய் இந்திய தேசியக்கொடி இருந்து வருகிறது.
இதனையடுத்து தேசிய கொடியில் இருக்கின்ற மூன்று வண்ணங்களிலும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. அதில் காவி நிறம் தைரியம் மற்றும் பலத்தை குறிக்கின்றது. அதன் வெண்மை நிறம் அமைதி மற்றும் உண்மையை குறிப்பிடுகிறது. அதன் பின் பச்சை நிறம் விவசாய செழிப்பு, பசுமை மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அதன் நடுவில் அமைந்திருக்கும் அசோகச் சக்கரம் வாழ்க்கையின் சுழற்சி முறையைக் குறிக்குமாறு அமைந்துள்ளது. பின்னர் நம்முடைய தேசியக்கொடியை கையாளுகின்ற வழிமுறைகள் இந்திய தேசிய கொடியின் விதிமுறையின் கீழாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதில் நாட்டின் எளிமையைப் போற்றும் விதமாக தேசிய கொடிகள் கதர் துணியினால் மட்டுமே நெய்யபட வேண்டுமென தேசியக்கொடி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய மக்களின் இறை நம்பிக்கை மற்றும் சுதந்திரம் உள்ளிட்ட பலவற்றை வெளிப்படுத்தும் தேசியச் சின்னமே நமது தேசியக் கொடியாக விளங்குகிறது. இதனால் நம்முடைய சுதந்திர இந்தியாவின் அடையாளம் என அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தேசியக்கொடி, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை குறிக்கின்றது. மேலும் இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகன்களின் முகவரியும் தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் நம் அனைவரும் அதை மதித்து போற்றி வாழ்வது நம் எல்லோருடைய கடமையாகும்.