Categories
மாநில செய்திகள்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு…? விளக்கம் கொடுத்த பள்ளி கல்வித்துறை….!!

நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், மே மாத கோடை விடுமுறை என்பது நீடித்துக் கொண்டே செல்கிறது. மேலும் சில பள்ளிகள் கொரோனா தொற்று உள்ளவர்களின் சிகிச்சை மையமாகவும் தனிமைப்படுத்தும் மையமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கல்வி என்ற தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிருபர்களை சந்திக்கும் போதெல்லாம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிப்பார், என தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் தீயாய் தகவல் பரவியது. இவ்வாறு பரவிய செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இந்த செய்தி குறித்து பள்ளிக்கல்வித்துறை கொடுத்துள்ள விளக்கமானது, “தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு என்று வெளிவந்த செய்தி தவறானது. பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார்” என்று அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் டுவிட்டரில், “தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததும் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப சூழ்நிலையை பொருத்து அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |