தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேறொரு பெயரில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முறைப்படுத்துவதோடு அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
சமீபத்தில் நாங்கள் ஆளுநரை சந்தித்தபோது கூட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இந்நிலையில் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இன்னும் கொஞ்ச நாட்களில் வெளியிட இருக்கிறோம். இன்றைக்கு சாமானிய மனிதர்கள் கூட ஊழல் பற்றி பேசும் அளவுக்கு ஆட்சி இருக்கிறது. தாசில்தார் அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தில் கூட ஊழல் தெரிகிறது என்று சாதாரண மனிதர்கள் பேசுகிறார்கள்.
இதனையடுத்து பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாட்களில் நான் சொல்கிறேன். நாங்கள் சேகரித்துள்ள ஊழல் பட்டியலில் 2,3 அமைச்சர்களின் பெயர்களும் இருக்கிறது. எங்களுக்கு கொஞ்சம் டைம் வேண்டும். அதன் பின் கூடிய விரைவில் நாங்கள் சேகரித்த ஆதாரங்களை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.