பிப்ரவரி 2ம் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் நாரதகான கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் கலந்து கொண்டார். மேலும் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி போன்ற மாவட்டங்களின் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் மாநாட்டினை தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் மங்கள பாண்டியன் பேசியதாவது, அரசு துறையில் உள்ள 4.5 லட்சம் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிறப்பு ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெரும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் வரும் 27ஆம் தேதி மாநில அளவிலான ஆயத்த மாநாட்டில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காணவில்லை என்றால் நடக்கவிருக்கும் மாநாடு அரசியல் திருப்புமுனையாக மாறும். மேலும் மாநாட்டு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர் சங்கங்கள் சாலையில் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.