டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவரான அவருடைய கணவரும் பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கில் பணியாற்றும் பெண் டாக்டர் (48 வயது) ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதே கிளினிக்கில் டாக்டராக பணிபுரிந்த இவருடைய கணவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநில புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண் மருத்துவருக்கு மட்டுமே கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளித்ததன் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களுடைய குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.