இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாட்கள்) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடைகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறையாததால் பல்வேறு மாநில முதல்வர்கள் நேற்று காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பிரதமர் மோடியிடம் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529லிருந்து 8,356ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 242லிருந்து 273 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 653லிருந்து 716ஆக உயர்ந்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மட்டுமில்லாமல் 34 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.