உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1,00,000 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அதேபோல கொரோனா வைரஸ் தொற்றால், சீனாவில் மட்டும் குறைந்தது 3,015 உயிரிழப்புகளும், உலகின் பிற பகுதிகளில் 267 உயிரிழப்புகளும் பதிவாகியாகியுள்ளன.
சீனாவை தவிர்த்து அடுத்தபடியாக பெரும்பாலோர் இத்தாலி மற்றும் ஈரானில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் குறைந்தது 1,200 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில் நேற்று அறிக்கையின் படி 124 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.