பாகிஸ்தானின் ஷாகாட் நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் ஷாகாட் (Shahkot) நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 85 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதிகள் மாவட்ட நிர்வாகங்களிடம் இல்லாததே எச்.ஐ.வி நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எச்ஐவி பாதிப்பு வேகமாக பரவிவரும் நிலையில் கணக்கில் வராத சில நோயாளிகளும் இருக்கக்கூடும் என்பதால் மாகாண அளவிலான ஆய்வின் கட்டாயத்தை ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சிந்து மாகாணத்தில் மட்டும் இதுவரையில் 600 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் அரசு உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை கோரியுள்ளது. பாகிஸ்தானில் 2017-ம் ஆண்டு மட்டும் 20, 000 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டதாகவும் அந்த நாடு ஆசியாவின் 2- ஆவது அதிக எச்ஐவி பாதிப்பு நாடாக உள்ளதாகவும் ஐநா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.