கனடாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
கனடாவில் கொரோனாவால் இதுவரை 831,577பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21,397பேர் இறந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நாளொன்றுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏழு நாட்களாக அது 3000 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கனடாவில் தற்போது மொத்தமாக 33,972 பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பாதிப்புகள் குறைந்து வரும் இவ்வேளையில் கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கொரோனா தாக்கம் குறைந்த போதிலும், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கனடாவிலும் அதிகரித்து வருகிறது.
பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் 540 பேருக்கும், தென் ஆப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் 33 பேருக்கும், பிரேசில் வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கும் தொற்றியுள்ளது என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தற்போது கனடாவில் 10 மாகாணங்களில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மற்ற பகுதிகளிலும் இது பரவலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது.